Saturday, August 08, 2009

ரகசியங்கள்

நீர்ப்பரப்பின் மிக மெல்லிய சலனங்கள்
திடீரென பொருள் கொள்கின்றன.
செல்லும் மென்காற்றின் நெய்த புத்தம் புது கனவுகள்
நமக்காக விட்டுச்சென்ற குறிப்புகளும்
உணர ஏங்கிய ரகசியங்களுமாய்.
நமைச்சுற்றி நிரப்பும் நிலவொளி.
வெள்ளி நீர்ப்பரப்பில் நமதான ரகசியங்களின்
காலடியோசைகளின் எதிரொலியில் -
நம் காதுகளின் உள்ளே புது ரகசியங்களின்
ரீங்காரம்!

Saturday, February 21, 2009

பூனைகள்

பொதுவாகவே எனக்கு எப்போதுமே பூனைகளை பிடித்ததில்லை
நான் படித்துப்பார்க்கும் எல்லோருக்கும்
நகுலனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் போதலேருக்கும்
முராகாமிக்கும் பாரதியாருக்கும்
எல்லோருக்கும் பூனைகளைப் பிடித்திருக்கிறது
எனக்கோ அவ்வளவாக பூனைகளைப் பிடிப்பதில்லை
இத்தனையும் படிக்கையிலே எனக்கும் பூனைகளை பிடித்துப்
போய் விடவேண்டும் போலவே இருக்கிறது
ஆயினும் என்னால் எனக்கு
பூனைகளை பிடிக்க வைக்கமுடியவில்லை

Tuesday, October 28, 2008

சாம்பல் நிற சிறு மேகம்

இந்த தீபாவளி இரவில்
இருள் வானின் உயரே சென்று
வெடித்து வெளிச்ச சிதறல்கள் பரப்புகின்றன
வாண வேடிக்கைகள்
இறுதியில் மீந்து இருப்பது
வானில் ஒரு சிறிய சாம்பல் நிற
காளான் வடிவொத்த ஒரு
சிறு மேகம் மட்டுமே
எப்போதும் எனக்கு
வாண வேடிக்கைகளை விட
அந்த சாம்பல் வண்ண சிறு மேகங்கள்
ரொம்பவும் அழகாகவே தோன்றுகின்றன...

Tuesday, September 30, 2008

எனது

இத்தனை நாட்களாய் தணியாத குழப்பம்

எனது எது, எனதல்லது எது

நில்லாது தேடித் திரிகிறேன்



எனது எதுவென்று புரிவதற்குள்

அது எனதல்லதாகி விடுகிறது

நான் எனதானவனா?

என் வாழ்க்கை எனதானதா?

நான் வாழ்ந்து கழித்திருக்கும் இத்தனை நாட்களும்

எனதானவையா?



இத்தனை குழப்பங்களும் இப்படியே இருக்க,

எனது முடிவு மட்டும் எனதாயிருக்குமோ?

அதன் பின்னே எனக்கு அது

புரிந்ததாய் இருக்குமோ?



இத்தனை காலம் வாழ்ந்து முடித்தும்

தணியவே தணியாத இந்தக் குழப்பம்...

Saturday, September 06, 2008

நீச்சல்

சற்றுத் தொலைவில் தெரியும் கரை
நீச்சலுக்கு உறு துணையாய் அலைகள்
ஒளியால் கை காட்டி திசை உணர்த்தும்
கலங்கரை விளக்கம்
மனமெல்லாம் மகிழ்வு
வானெல்லாம் விண்மீன்கள்
வேறென்ன வேண்டும் கரை சேருதற்கு?
இத்தனை இருக்க
கரை சேருதல் அன்றி
வேறொரு வழியும் உண்டோ?

Friday, September 05, 2008

தத்தோம் தீம் தோம்

தத்தோம் தீம் தோம்
தரிகிட தோம்

நர்த்தன ஈசனின் தாளக்கட்டும்
தூரத்து இடியும்
நாட்டிய ஜதியும்
எதிரொலியாய் என் குளியலறைக்குள்
அடித்து துணி துவைக்கையிலே
காதாற நான் கேட்டேன்

தத்தோம் தீம் தோம்
தரிகிட தோம்

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்

சாத்தானின் இரட்டைக் கொம்புகளில்
சத்தமின்றி சந்தம் பயின்று

ஆய்த எழுத்தில்
தலை கீழாய் கருத்தொருமித்த
ஏராளக் கணங்களில்

உயர் மெய், உயிர் மெய்யில்
நினைவு நிறுத்தி
துணை எழுத்தாய் மெய் எழுத்து தேடி

அங்கும் இங்கும் பார்த்து நிற்கையிலே
மாறுகிறேன் நான்

ஒரு
ஒற்றைக்கொம்பு
காண்டாமிருகமாய்...

Monday, August 25, 2008

புத்தகங்கள்

சென்னையில் வந்து தங்கி இருப்பதுவும் கையில் ஆயிரம் ரூபாய்க்கு பரிசாய்க் கிடைத்த புத்தகக் காசோலை இருந்ததாலும் கிட்டத்தட்ட இருபது புத்தகங்கள் வாங்க முடிந்தது.
ஆஹா வேறென்ன வேண்டும் - விடுமுறை + வேண்டிய அளவு புத்தகங்கள் = விரும்பிய வண்ணம் வாழ்வு!

Monday, August 18, 2008

நிலை

இருள் தாண்டி தேடிப் பார்க்கையிலே
எதுவுமே தெரியலியே
இருட்டுக்குழாயின் எதிர்முனையிலே
இருக்குதொரு ரத்தினச்சுடருன்னு
சொன்னதெல்லாம் நெசமில்லையோ
நம்பிக்கையில் நியாயமில்லையோ?

உத்து உத்து பாக்கையிலே
எல்லாம் தெரிஞ்சிது
அடடா இது தானே வேணுமின்னு
இத்தனை நாளா ஏங்கித் தவங்கிடந்தேன்
இன்னிக்கு என் முன்னே இது வந்து நிக்கயிலே
இல்லேன்னு எப்படி நெனைக்கப் போனேன்?

நல்ல வேளை இப்பவே
கண் முழிச்சேன்
நாளைக்குன்னா நடந்தே முடிஞ்சிருக்கும்
நெனைக்காத எல்லாமும்!

Saturday, August 16, 2008

யாருமற்ற ஞாயிறு

யாருமற்ற ஞாயிறு
எனதல்ல என்றிருக்கையில்
மனதில் பொதிந்த மெட்டுக்களின்
எதிரொலி விளை பலனாய்
எனதே எனதான
மற்றொரு புது நாள்

Thursday, August 14, 2008

நிழல்

நான் நீண்டு நிலம் சாய

என் நிழல் நிமிர்ந்து

நிஜமாய் மாறி

ஒரு குழப்பக் கணத்தில்

நிஜம் கண்டோம்

நானும் நிழலும்!

Wednesday, August 13, 2008

மின்னல்

(1)
வாயிற்படியில்,
இல்லாத அழைப்பு மணியில்
விரல்கள் பதித்து அழுத்தியவாறே
நிறைந்து நின்றிருந்த மின்னல் ஒன்று
எனது வருகைக்குக் காத்து நின்று
நான் வந்த பின் சென்று மறைந்த மாயம்
யாரும் சொல்லிப் புரியவில்லை
யாரிடம் கேட்டும் தெரியவில்லை
(2)
இங்குள்ளோர் எல்லாரும் எல்லாமும் தெரிந்த நிலை ஒன்றைத்
தமக்காக்கிக் கொண்டமையால்
எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்ததாய் ஒரு மாயை
ஊடுருவியே கிடக்கிறது
நடுவே வந்து அவர்கள் காணாத மின்னலும்
அவர்கள் அறிவுக்கு மிக அற்பமே
பேசுவதற்கும் கேலி சிரிப்பதற்கும் இன்றைக்கு
இந்த மின்னல் போதுமே

நிறுத்தம்

துளித்துளியாய்ப் பரவி, திரவ நிலை தாண்டி
அங்கிருந்து அப்படியே ஆவியாய் நிறைந்து
பொடிப்பொடியாய் துகள்துகளாய்
தனித்த நிலை நீங்கி
தான் மறந்த நிலை தேடி
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய்
பறந்து திரியும் பற்பல நிலைகளின் நடுவில்
சற்றே நின்று இறகு மடித்து இளைப்பாற
இங்கே ஒரு நிறுத்தம்