உணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 13, 2013

கணக்குகள்


நாம் இன்றைக்கு இரவாய்
எழுதிய கணக்குகள்
தீர்த்துக் கொள்வோம்

எழுதாத கணக்குகள்
தம்மைத் தாமே
சரி பார்த்தும், தீர்த்தும்
கொள்ளும்

அது வரை நமக்கு
ஆசுவாசம் -
நாளைக்கு விடியல் வரையாய்

வியாழன், செப்டம்பர் 16, 2010

ஒளி

நிலாவின் நிழல் படர்ந்ததில்
பறி போனதோ பாதி சூரியன்

பாதி சூரியன் பறி போனதில்
பார்வைக்குப் பிறந்து வந்தது இலை
மீதொளிர்ந்த தெரு விளக்கொளி

ஒளி போனதில் வந்த ஒளியும்
ஒளி போல் அழகாகவே...

புதன், செப்டம்பர் 15, 2010

சாராதிருத்தல்

மழையும் மேகமும் தனித்தனியாயிருப்பினும்
ஒன்றுக்கொன்று சாராதனவல்ல
காற்றும் இலைகளும் தனித்தனியாயினும்
காற்று விளை அசைவிலேயே இலைகள் பொருள் கொள்கின்றன
அகமும் புறமும் தனித்தனியேயாயினும்
ஒன்றுக்கொன்று சாராதிருப்பதில்லை
தெரிந்ததும், தெரிந்தே தெரியாதனவும் தனியாயிருப்பினும்
இரண்டும் இணைந்தே பொருள் பெறுகின்றன
சாராதிருத்தல் பற்றிப் பேசும்போதெல்லாம்
சார்ந்திருத்தலை முழுதாய் அறிந்தே இருக்கிறோம்
இருப்பினும் அத்தனை எண்ண ஓட்டம் மொத்தமும்
ஒன்றுக்கொன்று சாராதிருப்பதாகவே படுகிறது

சனி, செப்டம்பர் 11, 2010

நாசமாப்போன நாலு வரி

எதாவது எழுதிப்புடணும்ன்னு தேடித் தேடிப் பாத்து முடிச்சா
பாடுபொருள் பஞ்சம் மட்டும் தான் மிச்சம் நிக்கிது
பாட்டு ஒண்ணும் புதுசாப் பொறந்துடல்லே
காணாத கனவும், நீண்டு நெளிஞ்ச நெழலுமாயும், இல்லாத இருப்பையும் பத்தி எழுதி எழுதி
பேனா மொனை தேஞ்சது தான் மிச்சம்

கட்டுக் கட்டாய் கறுப்பு மசி படிஞ்ச காயிதக் கட்டு
குளிர் காய எரிக்க மட்டுமே பிரயோசனம்
புதுசா எதாவது எழுதிப்புடணும்ன்னு நெனச்சு பேப்பரும் பேனாவுமாய் உக்காரும்போதெல்லாம் வந்து பொறந்திடும்
ஒரே மாதிரி, அதே மாதிரி, சுமாரான,
நாசமாப்போன நாலு வரி.

சனி, ஆகஸ்ட் 08, 2009

ரகசியங்கள்

நீர்ப்பரப்பின் மிக மெல்லிய சலனங்கள் திடீரென பொருள் கொள்கின்றன.
செல்லும் மென்காற்றின் நெய்த புத்தம் புது கனவுகள்: 
நமக்காக விட்டுச்சென்ற குறிப்புகளும் உணர ஏங்கிய ரகசியங்களுமாய். 
நமைச்சுற்றி நிரப்பும் நிலவொளி. 
வெள்ளி நீர்ப்பரப்பில் நமதான ரகசியங்களின் காலடியோசைகளின் எதிரொலியில் - 
நம் காதுகளின் உள்ளே புது ரகசியங்களின் ரீங்காரம்!

செவ்வாய், செப்டம்பர் 30, 2008

எனது

இத்தனை நாட்களாய் தணியாத குழப்பம்

எனது எது, எனதல்லது எது

நில்லாது தேடித் திரிகிறேன்



எனது எதுவென்று புரிவதற்குள்

அது எனதல்லதாகி விடுகிறது

நான் எனதானவனா?

என் வாழ்க்கை எனதானதா?

நான் வாழ்ந்து கழித்திருக்கும் இத்தனை நாட்களும்

எனதானவையா?



இத்தனை குழப்பங்களும் இப்படியே இருக்க,

எனது முடிவு மட்டும் எனதாயிருக்குமோ?

அதன் பின்னே எனக்கு அது

புரிந்ததாய் இருக்குமோ?



இத்தனை காலம் வாழ்ந்து முடித்தும்

தணியவே தணியாத இந்தக் குழப்பம்...

சனி, செப்டம்பர் 06, 2008

நீச்சல்

சற்றுத் தொலைவில் தெரியும் கரை
நீச்சலுக்கு உறு துணையாய் அலைகள்
ஒளியால் கை காட்டி திசை உணர்த்தும்
கலங்கரை விளக்கம்
மனமெல்லாம் மகிழ்வு
வானெல்லாம் விண்மீன்கள்
வேறென்ன வேண்டும் கரை சேருதற்கு?
இத்தனை இருக்க
கரை சேருதல் அன்றி
வேறொரு வழியும் உண்டோ?

வெள்ளி, செப்டம்பர் 05, 2008

தத்தோம் தீம் தோம்

தத்தோம் தீம் தோம்
தரிகிட தோம்

நர்த்தன ஈசனின் தாளக்கட்டும்
தூரத்து இடியும்
நாட்டிய ஜதியும்
எதிரொலியாய் என் குளியலறைக்குள்
அடித்து துணி துவைக்கையிலே
காதாற நான் கேட்டேன்

தத்தோம் தீம் தோம்
தரிகிட தோம்